சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க சராசரியாக ரூ.300 கோடி வரை செலவிடப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஓய்வூதியத் தொகையைப் பெற வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள் நேரில் வந்து வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க அவதிப்படுகின்றனர்.
அவர்களின் சிரமத்தைப் போக்க ‘TNEB PENSIONER MOBILE APP’ என்ற மொபைல் செயலியை மின்வாரியம் உருவாக்கி உள்ளது. இந்த செயலியை ஓய்வூதியதாரர்கள் தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்த பின் ஓய்வூதிய ஆணை எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை பதிவிட்டு செயலியின் சேவையைப் பெறலாம்.
அந்த செயலியில் மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை, ஆண்டு மொத்த ஓய்வூதிய அறிக்கை ஆகியவற்றைப் பெறலாம். இது வருமான வரித் தாக்கல் செய்ய உதவியாக இருக்கும்.மேலும், செயலியில் விரல் ரேகை பதிவு செய்து வாழ்நாள் சான்றிதழையும் பதிவேற்றம் செய்யலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.