தேர்தல் அதிகாரிக்கு எதிராக பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!


விவசாயிகள் சங்க தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உப்பாறு அணை, பரம்பிக்குளம், ஆழியார், அமராவதி உள்ளிட்ட சுமார் 31 நீர் நிலைகளின் நீரைப் பயன்படுத்துவோருக்கான சங்கத்தின் நிர்வாகக்குழு தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முறைகேடாக நடைபெற்றதாக பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியான குமரேசன், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பை நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிராகரித்துள்ளார். நிர்வாகக் குழுவினுடைய 31 தலைவர்கள் மற்றும் 136 உறுப்பினர்களை ஒருதலைபட்சமாகத் தேர்வு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், அவர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரி செய்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, “இந்த விவகாரத்தைத் தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும். தேர்தலில் போட்டியிடும் தந்தைக்காக மகன் தொடர்ந்த வழக்கு பொது நல வழக்காகாது. மனுதாரர் கோரிய உத்தரவை நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது” எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

x