ராமேசுவரம்: தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டும், கடலில் இறங்கியும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன்,ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான 3 நாட்டுப் படகுகளிலிருந்த மீனவர்கள், நெடுந்தீவு அருகே நேற்றுஅதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அந்த படகுகளிலிருந்த இருதயராஜ், கிராசியன், லியோனஸ், ஆரோக்கிய மெக்ரின், டிகாஸ், மெக்கெல், தயாளன், முருகன், சக்திசெல்வம், எசக்கி முத்து,களஞ்சியம், ராஜன், ஜார்ஜ், கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் ஆகிய 19 மீனவர்களை கைது செய்தனர். மேலும், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு நாட்டுப் படகுமற்றும் அதிலிருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த 25 மீனவர்களையும், காங்கேசன் துறைகடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத் துச்சென்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 25 நாட்டுப் படகு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பாம்பன் சாலைப் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் மற்றும் சிஐடியு, ஏஐடியுசி மீனவத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால் ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத் துறை, வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.
தலைவர்கள் கண்டனம்: மீனவர்கள் கைதைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 25மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் கச்சத்தீவுக்கு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓராண்டில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களையும், 28 படகுகளையும் பிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படையின் தொடரும் இந்த அட்டூழியத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
பாமக தலைவர் அன்புமணி: இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும். மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) பொதுசெயலாளர் எஸ்.அந்தோணி:நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது.இச்செயல் கண்டிக் கத்தது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், 4 நாட்டுப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வர உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் துரிதநடவடிக்கை எடுக்க வேண்டும்.