ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு: அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை


குமிழி ஏகலைவா ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவ, மாணவியரிடம் குறைகளைக் கேட்டார். உடன் ஆட்சியர் அருண்ராஜ்.படம்: எம்.முத்துகணேஷ்

குமிழி: தாம்பரத்தை அடுத்த குமிழி ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு செய்த ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஊராட்சியில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியர் ச.அருண்ராஜ் முன்னிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளி யில் சுமார் 200–க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள், மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளிடம் மதிப்பெண்கள் குறித்துகேட்டறிந்து, அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆங்கில பாடம் கற்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் சிறப்பு பாடம் எடுக்க ஆசிரியர்களையும் அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர், அவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க சொல்லி கேட்டு அறிந்தார். விடுதிகளில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்தும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, இப்பள்ளியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் 136 மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் 2 அடுக்கு கொண்ட விடுதி கட்டுமான பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டிடத்தின் தரம், கட்டுமானம் ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று அமைச்சர் கயல்விழிஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, தாட்கோ பொது மேலாளர் இந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x