பாஜக தலைவர் அண்ணாமலை முன் மேடையிலிருந்து தள்ளி விடப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ!


சிவகங்கை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக காரைக்குடி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோழன் பழனிச்சாமி கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 8-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் அரண்மனைவாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அடுத்த படியாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகங்கைக்கு வந்தார்.

கீழே விழுந்த முன்னாள் எம்எல்ஏ

அப்போது, அவர் மேடையில் ஏறியவுடன் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்வதற்காக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேடைக்கு சென்றனர். மேலும் சிலர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுப்பதற்காக அடித்துக்கொண்டு மேடையை நோக்கிச் சென்றனர். அப்போது, மேடையில் ஓரமாக நின்று கொண்டிருந்த காரைக்குடி முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சோழன் பழனிச்சாமியை கீழே தள்ளி விட்டனர். அப்போது கீழே நின்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக சோழன் பழனிச்சாமியைக் கையை பிடித்து தூக்கி விட்டனர்.

அதிமுகவில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சோழன் பழனிச்சாமி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x