தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி மது விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் 90 மி.லி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் அதிக பணம் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடிக்க முடியாதவர்கள்தான் குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்றும், குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்வதன் மூலம் கள்ளச் சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதைவிட மிக மோசமான வாதம் இருக்க முடியாது.

காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அதை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அதனால், 90 மிலி மது அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும். இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

கையடக்க காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்து பள்ளிக் குழந்தைகளையும், சிறுவர்களையும் கெடுத்தவர் என்ற பழியும், அவப்பெயரும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

எனவே, காகிதக் குடுவையில் 90 மி.லி. மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.