சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய நுங்கு வண்டி போட்டியில் ஏராளமான சிறுவர்கள் பங்கேற்று நுங்கு வண்டி ஓட்டி பரிசினை அள்ளிச்சென்றனர்.
தமிழகத்தில் கிட்டி, நொண்டி, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் காலப்போக்கில் அழிந்து வருகின்றன. இந்த வரிசையில் உள்ளது நுங்கு வண்டி பந்தயம். கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் பெரிதும் விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்து வந்தது. ஆனால், காலப்போக்கில் நுங்கு வண்டிகள் தயார் செய்வது நிறுத்தப்பட்டதால் பெரிதும் இவை விளையாடப்படாமல் இருந்தது.
இச்சூழலில், மறைந்த பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பிளாமிச்சம்பட்டியில் இன்று நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில், சிறுவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பிடித்த வீரர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், ரூ.500 ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசாக ரூ.400-ம், மூன்றாம் பரிசாக ரூ.300-ம், நான்காம் பரிசாக ரூ.200-ம் ரொக்கமாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற நுங்கு வண்டி பந்தய போட்டியை, சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
ஏற்கெனவே, இதே மாவட்டத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் கடந்த மே 30-ம் தேதி நடைபெற்ற புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.