இந்துக்கள் குறித்த ராகுல் பேச்சு முதல் மோடி, அமித் ஷா ரியாக்‌ஷன் வரை | விரைவுச் செய்திகள் 10


புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - அமித் ஷா விளக்கம்: ஐபிசி எனப்படும் இந்திய குற்றவியல் சட்டம், சிஆர்பிசி எனப்படும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், மற்றும் ஐஇசி எனப்படும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தாமதத்துக்குப் பதிலாக, இனி விரைவான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும். முன்பு பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களால் பலர் பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் - ப.சிதம்பரம் கருத்து: “புதிய குற்றவியல் சட்டங்களில் சில மேம்படுத்தப்பட்ட விஷயங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் வரவேற்றுள்ளோம். ஆனால், அதனை சட்டத்திருத்தம் வாயிலாகவே செய்திருக்கலாமே! புதிய குற்றவியல் திருத்தச் சட்ட மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். சில குறிப்புகளைக் கொடுத்திருந்தனர். ஆனால், அவை கருத்தில் கொள்ளப்படவில்லை. இச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வித ஆக்கபூர்வமான விவாதமும் செய்யப்படவில்லை.

சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் கூட்டமைப்புகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எனப் பல்துறை நிபுணர்களும் இச்சட்டத் திருத்தம் தொடர்பாக பல விமர்சனக் கட்டுரைகளை எழுதினர். மூன்று சட்டங்களின் மிக மோசமான குறைபாடுகளை அவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால் அரசாங்கத்தில் ஒருவர்கூட இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க அக்கறை கொள்ளவில்லை.

இந்த மூன்று சட்டங்களும் போதிய விவாதமும், ஆராய்ச்சியும் இல்லாமல் பழைய சட்டங்களைத் தரைமட்டமாக்கி கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆகையால் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக இருக்கும். அடுத்ததாக பல்வேறு நீதிமன்றங்களிலும் இந்தப் புதிய சட்டங்களால் பல சவால்கள் உருவாகும். காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் பல மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

நீட் முறைகேடு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்: நீட் முறைகேடு குறித்தும், மத்திய ஏஜென்சிகள் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக இருந்த கே.மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இரா.சம்பந்தன் மறைவு: மோடி, ஸ்டாலின் இரங்கல்: இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டது.

இதனிடேயை, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளில் இனிமையான தருணங்கள் எப்போதும் நினைவு கூறப்படும். அவர் இலங்கையில் வாழும் தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவைக்காக தொடர்ந்து பாடுபட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.

“ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பிரதமர், பாஜக மட்டுமே இந்துக்கள் கிடையாது” - ராகுல் காந்தி: நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் பேச்சு கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி கடவுள் சிவன் படத்தை காட்டிப் பேசினார்.

அப்போது அவர், “ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது” என்று பேசினார்.

மேலும், “அக்னிவீரர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. பிரதமர் மோடிதான். அக்னிவீரர் திட்ட வீரர்களின் உயிரிழப்பை வீர மரணங்களாக பாஜக அரசு ஏற்குமா? 'USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் அக்னிபாத் திட்டம்.மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. அம்பானி மற்றும் அதானிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக அங்குள்ள ஏராளமான மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது” என்று ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் பேச்சுக்கு எதிராக மோடி, அமித் ஷா கொந்தளிப்பு: பாஜகவினர் இந்துக்கள் இல்லை என்று மக்களவையில் கூறிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் பேசும்போதே இடைமறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும்.

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்: தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் கண்டித்து, பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

தமிழகத்தில் என்ஐஏ விசாரணை தீவிரம்: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 10 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி இருந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.