திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணத்தில் சிபிசிஐடி விசாரணை மந்தகதியில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியினர், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் கடந்த மே மாதம் 2-ம் தேதி காணாமல்போன நிலையில் 4-ம் தேதி அவரது உடல் அவரது தோட்டத்திலேயே பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உவரி காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் வழக்கு மே 22-ம் தேதி சி பி சி ஐ டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வந்தனர். சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் திருநெல்வேலியில் முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
அவர் எழுதியதாக குறிப்பிடப்பட்ட கடிதத்தில் இடம் பெற்ற 30-க்கும் மேற்பட்ட நபர்களிடமும் விசாரணை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்தும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது வரை அச்சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற முடிவுக்கு காவல் துறையினர் வரவில்லை.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் பால்ராஜ் கூறியதாவது: "திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணத்தில் தற்போது வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் கட்சியினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். வழக்கு விசாரணை மந்தகதியில் நடைபெறுவதாக நாங்கள் அறிகிறோம். வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
இதுபோல் அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட களக்காடு நகராட்சி பேருந்து நிலையம் தற்போது களக்காடு நகராட்சி பேருந்து நிலையம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிய வருகிறது. அவ்வாறு பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.