சித்திரைத் திருவிழா: திருக்கல்யாணத்துக்கு டோக்கன் கேட்டு மதுரை மேயரிடம் கவுன்சிலர்கள் முறையீடு


மதுரை: சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளுக்கான அத்தியாவசிய சுகாதார, குடிநீர் வசதிகளை மேற்கொள்வதற்கு 92 லட்சத்து 78 ஆயிரத்து 819 ரூபாய் மாநகராட்சி செலவு செய்துள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியம்மன் திருவிழா மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் திருவிழாக்கள் கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோலாகமாக நடந்தது. இந்த விழாக்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்கள். திருவிழா நாட்களில் பக்தர்கள் வசதிக்காகவும், கள்ளழகர் வைகை ஆற்றில் களம் இறங்குவதற்காகவும், மாநகராட்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கான குடிநீர், சுகாதார வசதிகளையும் செய்து கொடுத்தது.

இந்த அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சித்திரைத் திருவிழாவுக்காக முன் அனுமதி பெற்று, ரூ.92 லட்சத்து 78 ஆயிரத்து 819 செலவு செய்துள்ளது. பொது சுகாதார அவசர அவசியம் கருதி முன் கூட்டியே செலவு செய்த இந்த தொகைக்கு ஒப்புதல் வழங்கி கடந்த மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், கவுன்சிலர்கள், "கடந்த காலங்களில் சித்திரைத் திருவிழாக்களில் பங்கேற்க கவுன்சிலர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். குறிப்பாக திருக்கல்யாணத்தில் பங்கேற்க கவுன்சிலர், அவரது மனைவி பங்கேற்க 2 டோக்கன் வழங்கப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டாக கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

மாநகராட்சியும், அதன் கவுன்சிலர்களும் தான் மீனாட்சியம்மன் கோயிலையும், அதன் சுற்றுப் புற வட்டாரங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறார்கள். அதனால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மேயர், ஆணையாளர் பேசி, அடுத்த திருவிழா முதல் டோக்கன் பெற்று கவுன்சிலர்களுக்கான மரியாதை மீட்டு கொடுக்க வேண்டும்."என கவுன்சிலர்கள் கூறினர்.