கிருஷ்ணகிரி அருகே 90% சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித் தர பழங்குடியினர் கோரிக்கை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 90 சதவீதம் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளை கட்டித்தரக் வலியுறுத்தி, கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காளியம்மன் கோயில், எம்ஜிஆர் நகர், காமாட்சிபுரம் மற்றும் கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின(இருளர்) மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அவர்களை போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுத்ததால், மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தான் தாங்கள் மனு அளிப்போம் என கூறி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலா, பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பழங்குடியின மக்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, "பர்கூர் வட்டத்தில் வசிக்கும் தாங்கள், 100 நாள் வேலை திட்டம், காடுகளில் கிடைக்கும் விறகுகள், தேன் உள்ளிட்டவை சேகரித்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தனர். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 முதல் 4 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் வலுவிழுந்த நிலையில் 90 சதவீதம் சேதமாகி உள்ளது. இதனால் மழைக் காலங்களில் கோயில், பள்ளிகளில் வசிக்கும் நிலை உள்ளது.

இந்த சேதமான தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, தற்போது உள்ள குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், புதிய வீடுகள் கட்டி தருவதற்கு பதிலாக சேதமான வீட்டை புனரைமத்து தருவதாக அலுவலர்கள் கூறுவது ஏற்க முடியாது. இந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்தாலும், ஒரு மழைக்கே தாங்காது. எனவே, மாவட்ட ஆட்சியர், நாங்கள் வசிக்கும் வீடுகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என பலமுறை மனு அளித்தும் யாருமே வரவில்லை என கண்ணீருடன் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது, "தானே நேரில் ஆய்வு செய்து, புதிய வீடுகளை கட்டித் தர தலைமை செயலாளருக்கு கருத்துரு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து மனுக்களை அளித்துவிட்டு பழங்குடியின மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பர்கூர் வட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இன்று,கிருஷ்ணகிரியில் ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் தங்களுக்கு சேதமான தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளை கட்டித்தரக் வலியுறுத்தி மனு அளித்தனர்.