புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தஞ்சையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்


தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். படம். ஆர். வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: மத்திய அரசு புதிதாக இயற்றி உள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்துவதை கண்டித்து தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (ஜூலை 1ஆம் தேதி) தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் தியாக. காமராஜ் தலைமை வகித்தார். செயலாளர் எஸ். சுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம். ஆர். சிவசுப்பிரமணியன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பேசியதாவது: "நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷியா அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பும் உண்ணாவிரத போராட்டமும், நாளை ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் என வரும் ஜூலை 8ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

x