“பிரிவினையைத் தூண்டும் நோட்டீஸ் ஒட்டியோர் மீது கடும் நடவடிக்கை தேவை” - வானதி சீனிவாசன்


கோவை வ. உ .சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோத்தகிரி சாலையில் பிரிவினை தூண்டும் விதத்தில் சாலையில் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இது போன்ற சக்திகள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை வ. உ .சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "பொழுதுபோக்க வரும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளோம். முதல் கட்டமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் கோவை தெற்கு தொகுதி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது. தொகுதியில் பல்வேறு சாலைகள் மோசமாக உள்ளன.

சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்த இடங்களில் கூட சாலைகள் முழுமையாக போடப்படவில்லை. ஆளுங்கட்சி அமைச்சர்கள் கோவைக்கு வரும் போது தெற்கு தொகுதிக்கென பிரத்யேகமாக நேரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 30 நாட்கள் நடத்தப்பட வேண்டிய சட்டப்பேரவை மானிய கூட்டம் எட்டு நாட்கள் மட்டும் நடைபெற்றது வருத்தமளிக்கிறது. சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவது தொடர்பான வீடியோக்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. வெட்டியும், ஒட்டியும் கொடுக்கின்றனர்.

கோத்தகிரி சாலையில் இந்தியா ஒழிக எனவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் பிரிவினை தூண்டும் விதமாக சாலையில் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இது போன்ற சக்திகள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க விட்டால் அவர்களும் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று தான் பொருள். சட்டப்பேரவையில் பில்லூர் 3-ம் குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்து விட்டது என அமைச்சர்கள் பேசுகின்றனரே தவிர வேலைகள் நடப்பது இல்லை. தமிழகத்தில் நல்ல தலைவர்கள் வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக் கருத்து இல்லை.

நல்ல தலைவர்களை உருவாக்க அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளை செய்கின்றனர். விஜய் அரசியல் கட்சியை உருவாக்கி இருக்கிறார். எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார். தற்போது உயர்கல்வியுடன் அரசியலில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். படித்தவர்களை விட தங்களை மக்களுக்காக அர்ப்பணித்துக் கொள்பவர்கள் தான் அரசியலுக்கு தேவைப்படும். மத்திய அரசு மூன்று புதிய சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

நீண்ட நெடுங்காலமாக மனதில் பதிந்த சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு காலசூழலுக்கு ஏற்றவாறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மரண தண்டனை வரை கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபோன்ற சட்டங்கள் கண்டிப்பாக வேண்டும். சட்டத்தின் பெயர்களில் இருக்கக்கூடிய பிரச்சினையை ஒரு வழக்கறிஞராக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

x