புதுச்சேரி: விரைவாக நீதி கிடைக்க 7 விரைவு நீதிமன்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேவையான நீதிபதிகள், அலுவலக அதிகாரிகள் நியமிக்கவுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த அறிமுக விழா கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.
முதல்வர் ரங்கசாமி குற்றவியல் சட்டங்கள் குறித்த கையேடை வெளியிட்டு பேசியது: "காலம் கடந்த நீதி சரியாக இருக்காது. கொலை, பாலியல் போன்ற பெரிய குற்றங்களுக்கு காலக்கெடுவுக்குள் தண்டனை கிடைக்க வேண்டும். கொலை குற்ற வழக்குகள் 3 ஆண்டுகள் வரை நீடிக்கிறது. காலம் நீடித்தால் அது நீர்த்து போய்விடும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டாயம் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என 3 புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றங்களை செய்ய நினைக்கும் கும்பலுக்கும், மக்களுக்கும் இந்த சட்டங்கள் குறித்து தெரிய வேண்டும். இந்தச் சட்டங்கள் குறித்து தமிழில் விளம்பரப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் சட்டங்கள் கடுமையாக உள்ளது என குற்றம் செய்வோருக்கு தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக ஒரே சட்டங்களை பின் பற்றி வருகிறோம். நமக்கு நாமே குற்றவியல் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு மத்திய அரசு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது விரைவாக, நியாயமான நீதி கிடைக்கும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பல குற்றங்கள் நடக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும். மின் அஞ்சல் மூலம் வழக்குப் பதியும் போது விரைவாக நீதி கிடைக்கும். காவல் துறை, சட்டத் துறை, நீதிமன்றங்களும் இணைந்து செயல் பட்டால் மக்களுக்கு விரைவாக, சரியான நீதி கிடைக்கும். வக்கீல்களுக்கு பொறுப்பு உள்ளது.
விரைவாக நீதி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என எண்ண வேண்டும். மத்திய அரசின் நோக்கம் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து, குற்றங்கள் குறைய வேண்டும் என்பது தான். சிறைக்கு சென்றால் உடனே வெளியே வர முடியாது என்ற நிலை இருந்தால் குற்றம் செய்யும் எண்ணம் வராது. கூலிப்படை என எங்கேயே இருந்து கொண்டு குற்றங்கள் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என கடுமையான குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மக்கள் பயமின்றி, அச்சமின்றி, பாதுகாப்பாக வாழும் நிலையை உருவாக்குவதே இந்த சட்டங்களின் நோக்கம். நம் தேவைக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப சட்டங்கள் கொண்டுவரும்போது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். புதுவையில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அச்சமின்றி புதுவைக்கு வந்து செல்ல வேண்டும்.
விரைவாக நீதிகிடைக்க 7 விரைவு நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேவையான நீதிபதிகள், அலுவலக அதிகாரிகள் நியமிக்க வுள்ளோம். காலி பணியிடங்களை அரசு நிரப்பி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களுக்கு பாராட்டுக்கள். இந்த சட்டங்கள் குறித்து சட்டத்துறை, தமிழில் கையேடு தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.