கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யும்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெண்டர் கோரியிருந்தது.
ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்த நிலையில், மே 3-ம் தேதிக்குள் கூடுதல் பாமாயில் சப்ளை செய்யும்படி உணவு பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு பாமாயில் சப்ளை செய்யும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "வழக்கமாக, அரசுக்கு பாமாயில் சப்ளை செய்து வரும் மனுதாரர் நிறுவனங்களுக்கு சந்தை நிலவரம் நன்றாக தெரிந்திருக்கும் எனவும், பாமாயில் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 27-ம் தேதி தான் இந்தோனேஷியா அரசு தடை விதித்துள்ளது என்ற போதும், அதற்கு முன்னதாக மார்ச் 2-ம் தேதியே கூடுதல் பாமாயில் சப்ளை செய்ய கோரப்பட்டதால், அரசின் உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை " எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், 2 லட்சம் லிட்டர் பாமாயில் சப்ளை தொடர்பாக கோரப்பட்ட டெண்டர் ஏப்ரல் 21-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28-ம் தேதி தான் திறக்கப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை விதித்துள்ளதாக கூறி டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஏற்ற நீதிபதி, அரசு உரிமையாளராக செயல்பட்டாலும் சரி, வாடகைதாரராக செயல்பட்டாலும் சரி, உண்மையாக செயல்பட வேண்டும் எனக் கூறி டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.