அரவை திறனை அதிகரிக்கக் கோரிக்கை: காஞ்சிபுரம் குறைதீர் கூட்டத்தில் வாணிப கிடங்கு முகவர்கள் மனு


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு அளிக்கும் மக்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் பொதுமக்கள், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு முகவர்கள் உள்பட பலர் மனுக்களை அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். அப்போது கீழ்கதிர்பூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அரவை முகவர்கள் சார்பிலும் இந்தக் கூட்டத்தில் மனுக்களை அளித்தனர்.

இந்த அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் 120 நேரடி நல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அரவை முகர்வகளாக உள்ள எங்களுடைய ரைஸ்மில்லில் மாதாந்திர அரவை திறன் 23500 டன் ஆகும். ஆனால் எங்களுக்கு 10 ஆயிரம் டன் மட்டும் வழங்குகின்ரனர். மீதி நெல்லை மற்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.

எனவே மாவட்டத்தின் அரவை திறனுக்கு ஏற்றார்போல் நெல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். காஞ்சிபுரம் மாவட்ட நெல் தரமானதாக உள்ளது. எங்களிடம் வழங்கினால் தரமான அரிசியை உருவாக்கி தர முடியும். அதன் மூலம் மக்களுக்கும் தரமான அரிசி கிடைக்கும் என்றனர்.