கல்குவாரிகள் அமைக்க எதிர்ப்பு: கோவில்பட்டி அருகே கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றிய கிராம மக்கள்


கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி கிராமப் பகுதியில் கல்குவாரிகள் அமைப்பதை கண்டித்து இன்று காலை கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளும் சுமார் 4000 மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கல் குவாரிகளை மூட வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், செட்டிக்குறிச்சி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் புதியதாக 2 கல்குவாரிகள் தொடங்க கனிமவளத்துறை வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புதலோடு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த செட்டிக்குறிச்சி கிராம மக்கள் கனிமவளத் துறை வருவாய்துறை அதிகாரிகளைக் கண்டித்து இன்று காலை முதல் செட்டிகுறிச்சி முழுவதும் கடைகளை அடைத்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து செட்டிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.செந்தூர் பாண்டி கூறுகையில், ''செட்டுக்குறிச்சி பகுதியில் ஏற்கெனவே இயங்கி வரும் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் அதிக முறை பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளால் குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் சேதம் அடைந்து வருகின்றன. அரசு விதிமுறைகள் எதையும் கல்குவாரிகள் கடைபிடிப்பதில்லை.

இரவு பகலாக கனரக லாரிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகின்றன. 4 பேர் வாழ்வதற்காக 4,000 மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறோம். இந்தச் சூழலில் கூடுதலாக 2 குவாரிகளுக்கு கனிமவளத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி அளித்திருப்பது மக்களை வேதனையடைய செய்துள்ளது. எனவே இன்று செட்டிக்குறிச்சி முழுவதும் கடைகளை அடைத்து கருப்பு கொடி கட்டி கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.