அமைச்சர் துரைமுருகனின் பேச்சு தமிழகத்தில் கள்ளச் சாராய வியாபாரம் கொடிகட்டி பறக்க வழிவகுக்கும்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு


சென்னை: சட்டப்பேரவையில் மது தொடர்பாகஅமைச்சர் துரை முருகன் பேசியது, கள்ளச் சாராய வியாபாரம் தமிழகத்தில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும் என்றுமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச் சாராய விற்பனை, கள்ளாச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை,மக்களை மதுவுக்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகள். இவற்றை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.

அண்மையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை என்பது ஆளும் கட்சியினரின் ஆசியோடு நடப்பதாக பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன. இதை நிரூபிக்கும்வகையில், நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உரையாற்றி இருக்கிறார்.

உழைப்பவர்கள் தங்கள் அசதிக்காக மது குடிக்கின்றனர். டாஸ்மாக்கடைகளில் விற்கப்படும் மதுவில்‘கிக்’ இல்லாததால், கள்ளச் சாராயம் குடிக்கின்றனர். கள்ளச் சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெருகாவல் நிலையம் திறக்க முடியாது.மனிதர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கடும் கண்டனம்: இவரது பேச்சு, கள்ளச் சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும். அரசே இதை ஊக்குவிப்பது போல் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் திமுக அரசுக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அமைச்சரின் பேச்சு, தவறான யோசனை சொல்லக்கூடிய அமைச்சர் அரசனுக்கு அருகில் இருப்பது, 70 கோடி பகைவர்கள் சூழ்ந்து கொள்வதற்குச் சமம் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

ஆட்சியால் ஏற்படும் நன்மை,தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவன் கொஞ்சம், கொஞ்சமாகத் தன் நாட்டை இழப்பான் என்ற வள்ளுவரின் வாக்கை நிலைநிறுத்தி, கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x