விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்: பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வேண்டுகோள்


சென்னை: பால் சார்ந்த உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க பால் முகவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் முக்கிய நிறுவனமாககர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி திகழ்கிறது.

அம்மாநிலத்தில் உள்ள 24,000 கிராமங்களில் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் 27 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 85 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தது. அங்கு பால்உற்பத்தி அதிகரிக்க தொடங்கியிருப்பதன் காரணமாக, தினசரி பால் கொள்முதல் தற்போது 1 கோடிலிட்டர் என்ற இலக்கை எட்டியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல் அதிகரித்துவரும் நிலையில், நுகர்வோருக்கான பால்விற்பனையில் கடந்த சில நாட்களுக்கு முன் (ஜூன் 26) சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் உள்ளிட்ட 10 வகையான 500 மிலி பாக்கெட் மற்றும் 1 லிட்டர் பாக்கெட்டில் கூடுதலாக 50 மிலி பாலின் அளவை அதிகரித்துள்ளது. கூடுதலாக அடைக்கப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை பாக்கெட்டுக்கு ரூ.2 மட்டும் உயர்த்தியுள்ளது. இதை வரவேற்கிறோம்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் கட்டமைப்புகள் தொடர்பாக நந்தினி நிர்வாகத்தின் அதிகாரிகள் தமிழகம் வருகை தந்தனர். இங்கு பாடம் பயின்று சென்றவர்கள் இன்று ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் நினைத்தால்கூட எட்ட முடியாத இமாலய இலக்கை தொட்டு உள்ளனர்.

ஆவினின் செயல்பாடுகளையும், நந்தினியின் அபார வளர்ச்சி குறித்த செயல்பாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. எனவே, ஆவினுக்கான பால் கொள்முதலையும், பால் மற்றும் பால்சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி,விற்பனையையும் அதிகரிக்க தமிழக அரசும், ஆவின் நிறுவனமும்ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.