சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, லாரியில் குடிநீர் விநியோகிக்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமாரின் மகன் யுவராஜ் (11). வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மகளும் வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், அதனால் சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் ஆகியோருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறிய அவர், ‘‘இப்பகுதியில் 625 குடியிருப்புகள் உள்ளன. பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
இருப்பினும் இங்குசுமார் 200-க்கும்மேற்பட்ட நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் நீர் மாதிரி சோதனை அறிக்கை ஆகியவை கிடைத்தவுடன் உண்மைக் காரணம் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சென்னை குடிநீர் வாரியம் குழாய் குடிநீர் விநியோகத்தை நிறுத்திவிட்டு, லாரியில் விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘குடிநீர் வாரிய ஆய்வகத்தில் இருந்து வந்தஆய்வு முடிவில் குடிநீரில் கழிவுநீர்கலப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் மேலும் உறுதிப்படுத்த, கிங் இன்ஸ்டிட்யூட்டில் நீர் மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அப்பகுதியில் குழாய் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குழாய்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்அங்கு லாரிகள் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘2-வது நாளாக இன்றும் வீடு வீடாக சென்று, யாருக்கேனும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளதா என ஆய்வு செய்துவருகிறோம். நேற்று அங்கு சிறப்புமருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அதில் 139 பேர் பயன்பெற்றனர். அனைத்து வீடுகளை சுற்றியும் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது. லைசால் கிருமி நாசினியும்தெளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை புதிதாக யாரும் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படவில்லை’’ என்றனர்.