கோவை: டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் தரமாக உள்ளதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி னார்.
கோவை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில், கட்சி செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறோம். மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதுடன், அடுத்த தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
நாங்கள் கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, டாஸ்மாக் மதுபானம் தரும் போதை போதவில்லை என்பதால்தான், பலரும் கள்ளச்சாராயத்தை நாடுவதாகத் தெரிவித்தனர். டாஸ்மாக் மதுபானம் தரமாக உள்ளதா?
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குகிறார்கள். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்கவில்லை. இது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கள் விற்பனைக்கு அனுமதி அளித்து, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். மேகேதாட்டு விவகாரம்தொடர்பாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மூத்த தலைவர்கள் ஆகியோர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை ஏன் நேரில் சென்று சந்திக்கவில்லை? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.