கோவையில் பழுதுடன் அரசுப் பேருந்து இயக்கம்: மூவர் பணியிடை நீக்கம்


பழுதடைந்து காணப்பட்ட அரசுப் பேருந்தின் ஸ்டீரிங்.

கோவை: கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நேற்று முன்தினம் ஒரு பேருந்து இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் உள்ள "ஸ்டீரிங்" வளைவு முறையாக பொருத்தப்படாமல், குழாய்க்கும், ஸ்டீரிங்க்கும் இடைவெளியுடன் இருந்தது. இதனால் ஸ்டீரிங் பேருந்து ஓட்டும் போது ஆடி, கழன்று விழுவது போல் இருந்தது. மேலும், இதன் அடிப்பகுதியில் சில தொழில்நுட்ப கோளாறுகளும் இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து பயணிகள் சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பேருந்து எண்ணுடன் வீடியோ வெளியிட்டனர். அரசுப் போக்குவரத்து கழகத்தினர் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அந்த வீடியோவில், ‘பேருந்தில் ஏதேனும் ஒரு சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், இப்படி இருக்கக் கூடாது. அதுவும் கோவை மேலாண் இயக்குநர் இருக்கும் கோவை தலைமையகத்தில் உள்ள பேருந்துகளே இப்படி இருந்தால் மற்ற கிளைகளில் இயங்கும் பேருந்துகளை பற்றி கூற வேண்டியதில்லை.

கோவை - மேட்டுப்பாளையம் இயங்கும் பேருந்து. நமது ஓட்டுநர்கள் மிக மிக திறமையானவர்கள் தான் ஏதாவது, சம்பவம் நடைபெறும் வரை" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்விவகாரம் குறித்து கேள்விப்பட்ட கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துகழக மேலாளர் அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளித்தனர். அதைத் தொடர்ந்து, மேற்கண்ட பேருந்தினை சரிவர பராமரிப்புப் பணி செய்யாத தொழில்நுட்ப பணியாளர்கள் 2 பேர், உதவிப் பொறியாளர் ஒருவர் என மூவர் பணியிடை நீக்கம் செய்து கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழக மேலாளர் உத்தரவிட்டார்.