‘சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை’: முன்களப் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் @ சென்னை


சென்னை: டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு மாத ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூன் 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்: "தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் (DBC - Dengue Breeding Checkers), கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகம் முழுவதும் சுமார் 38 ஆயிரம் பேர் தினக்கூலி அடிப்படையில் பணி‌யாற்றி வருகிறார்கள்.

கொசுக்களால் டெங்கு மட்டுமல்லாமல் சிக்குன்குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற பல நோய்கள் பரவுகின்றன. எனவே, கொசுக்களின் பெருக்கத்தை தடுத்திட, கொசுப் புழுக்களை ஒழிக்கும் இவ்ஊழியர்களின் பணியின் மூலம் பல நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. நீரினால் பரவும் நோய்கள், டைபாய்டு, காலரா, வாந்தி, பேதி, அனைத்து விதமான அம்மை நோய்கள் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவும் போது அவற்றை தடுப்பதற்கான பணியிலும் இப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மழை, வெள்ளம், புயல்கள் பாதிப்பின் போது சேதமடைந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளைச் செய்கின்றனர். இந்த 38,000 DBC பணியாளர்களும் உள்ளாட்சித்துறை மூலமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலியாக ரூ.200, ரூ.250, ரூ.300, ரூ.440 வரை மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த குறைந்த சம்பளமும் கூட மிக‌ தாமதமாக பல மாதங்கள் கழித்தே வழங்கப்படுகிறது. இதர உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் ஊதியம் வழங்கப்படுகிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்ட ரீதியான உரிமை மறுக்கப்படுகிறது.

இவர்கள், மிகக் குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட பணியை செய்தாலும், சுகாதாரத் துறையில் நேரடியாக பணி அமர்த்தப்படாமல் பல்வேறு உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்ற அமைப்புகளின் கீழ்பணி புரியும் பொழுது, நோய் தடுப்பு பணியை சரியாக ஒருங்கிணைக்கப்பட முடியாத சூழல் இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு இவர்களை முழுமையாக மருத்துவத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரிவதால் பல இடங்களில் DBC பணியாளர்களை உள்ளூர் கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள், ஆளும் கட்சி அரசியல்வாதிகள், பிரமுகர்கள் என பலர் அவர்களது வீட்டு வேலை, தோட்ட வேலை, மற்ற சொந்த வேலைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். உயரதிகாரிகள் பல இடங்களில் DBC பணியாளர்கள் பெறும் குறைந்த ஊதியத்தில் இருந்தும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் வேலையை விட்டு நிறுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகிறார்கள்.

கொசுப் புழு ஒழிப்புப் பணிக்கு சற்றும் தொடர்பில்லாத, வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் கொசுப் புழு ஒழிப்பு பணி பல நேரங்களில் பாதிக்கப்படுகிறது. எனவே, தினக்கூலி முறையை கைவிட வேண்டும். மாத ஊதியம் வழங்கிட வேண்டும். ஊதியத்தை காலதாமதமின்றி மாதாமாதம் வழங்கிட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பணிபுரியும் , கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி, DBC பணியாளர்களுக்கு, DBC பணியாளர் என வகைப்படுத்தி ஊதியம் சில இடங்களில் வழங்கப்படுகிறது‌. அதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 21,000/- வழங்கிட வேண்டும். பணி நீக்கம் செய்யக்கூடாது. பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பணி நிரந்தம் வழங்கிட வேண்டும். கொசுப்புழு அழிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணியை செய்யும் DBC பணியாளர்களை, பல்வேறு அமைப்புகளின் கீழ் பணி செய்ய விடாமல், இவர்களின் பணிக்குப் பொருத்தமான மருத்துவத் துறையின் கீழ் மட்டும் பணி செய்ய ஏதுவாக, மருத்துவத்துறையின் கீழ் பணி அமர்த்திட வேண்டும்.

மருத்துவத் துறை மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும், அவர்களுக்கு அடையாள அட்டையும், சீருடையும் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதனை வலியுறுத்தி இன்று (ஜூன் 30) காலை சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டரங்கம் நுழைவு வாயில் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1,800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். செயலாளர் அ.சதீஷ், பொருளாளர் க.பூமிநாதன், மாநில துணைச் செயலாளர் ஆர்.குணசேகரன், எம். வெங்கடாச்சலம், எம். செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம்.இராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.காளிதாசன்,பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.தனவந்தன், எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திர நாத் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.