ஆற்றுக் கால்வாயில் பாலம் கட்டிய நபரால் சர்ச்சை: மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புக்கு வேலை செய்வதாக புகார்!


ஆற்றுக் கால்வாயில் பாலம்

தி.மு.க கவுன்சிலரின் உதவியுடன் தனியார் நபர்கள் கிருதுமால் ஆற்று கால்வாயில் பாலம் கட்டி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி 68-வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி, காந்திஜி தெரு விரிவாக்க பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கிருதுமால் நதி கால்வாயை ஆக்கிரமித்து பால்சாமி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாலம் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த பாலம் கட்டினால் தான், தங்களது ரியல் எஸ்டேட் இடங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என சுயநலமாக யோசித்து தேவையற்ற இடத்தில் நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் நபர்கள் பாலம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை எனவும், 68-வது வார்டுக்கு உட்பட்ட தி.மு.க. கவுன்சிலர் மூவேந்திரன் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும், பாலத்தை இடிக்காமல் அதிகாரிகள் கண் துடைப்பிற்கு போர்டு ஒன்றை மட்டும் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் சட்ட விரோத செயலுக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவரிடம் இது குறித்து பேசினோம், "சம்மந்தப்பட ரியல் எஸ்டேட் இடத்திற்கு பாதை இல்லை என கிருதுமால் நதி கால்வாயை ஆக்கிரமித்து பாலம் போட்டுள்ளனர். பிற்காலத்தில் பாலம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இடம் வாங்கிய நபர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்‌.

அறிவிப்பு போர்ட் வைத்துள்ள அதிகாரிகள்

அதே போல் நீர் நிலையின் அமைப்பும் மாறுபடும் என புகார் அளித்தேன். ஆனால், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் மற்றும் அவரின் உதவியாளர் அபுதாஹீர் ஆகியோர் புகார் கொடுத்த என்னையே மிரட்டினார்கள். 68-வது வார்டு தி.மு.க கவுன்சிலரின் பின்புலத்தில் இருப்பதால் இவ்வாறு மிரட்டலில் ஈடுபடுகின்றனர். தற்போது, உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதால் கண் துடைப்பிற்கு ஒரு போர்டை வைத்துள்ளனர். இது முழுமையான நடவடிக்கையாகது. எனவே கால்வாயின் ஆக்கிரமிப்பான பாலத்தை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். சட்ட விரோதமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து மாநகராட்சி மதுரை மாநகராட்சி 68-வது வார்டு கவுன்சிலர் மூவேந்திரனிடம் பேசினோம், " இடத்திற்கு சொந்தமான பாலு என்பவர் கவுன்சிலர் என்ற முறையில், புரோக்கர் கமிஷன் கொடுக்கவில்லை எனவும் ரமணி என்பவர் மிரட்டுகிறார் என்றும் என்னிடம் தெரிவித்தார். இதனால் உதவி செயற்பொறியாளர் ஆலோசனைப்படி பாலத்தை ஆக்கிரமித்ததாக இரண்டு நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பின் மாநகராட்சி பாலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. என்னுடை வார்டு என்பதால் தான் அதைக் கூட செய்தேன். எனக்கு அந்த பாலத்திற்கும் சம்மந்தமில்லை. பாலத்தை இடித்தால் கூட எனக்கு பிரச்சினை இல்லை" என்றார்.

இது குறித்து, மதுரை மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டோம், "நான் அலுவலக மீட்டிங்கில் உள்ளேன். எதுவாக இருந்தாலும் அலுவலகத்தில் பேசி தகவல் பெற்றுக் கொள்ளவும்" என்றார்.

மேலும், மதுரை மாநகராட்சி மண்டலம் எண்- 3 துணை கமிஷனர் மனோகரன், "அனுமதி பெறாமல் பாலம் கட்டியது உண்மை தான். அது குறித்து, மாநகராட்சி கமிஷனர் வரை புகார் வந்தது. அதனால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தற்காலிகமாக யாரும் அந்த பாலத்தை பயன்படுத்த கூடாது என உத்தரவு போடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

x