மலர்க் கண்காட்சி சிறப்பு அலங்காரம் சரிந்தது: மழையால் அவதியுறும் உதகை!


உதகையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, மலர்க் கண்காட்சிக்காகத் தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்ற சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வானிலை மேகமூட்டமாகக் காட்சியளிக்கிறது. தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையாலும், முதல்வர் வருகையால் ஏற்பட்ட கெடுபிடிகளாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகளில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலங்காரம் சரிந்தது

இந்நிலையில், மழை காரணமாக மலர்க் கண்காட்சி நடந்துவரும் உதகை தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்புத் தோற்றத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு வருகை தந்திருக்கும் நிலையில் நடந்த இந்தச் சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

x