சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, தரம் இல்லாத சைக்கிள்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனதுஎக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? இந்த தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகின்றன. அவற்றில் பல சைக்கிள்கள் தரமில்லாமல் இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில், அதுதொடர்பாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.