வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவரங்களை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி


சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேச பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால், பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை பாமகதலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:

பிஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது சரிதான் என பாட்னா நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், 2008 புள்ளிவிவர சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். எனவே, இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வரும், அமைச்சர்களும் உண்மைக்கு மாறாக பேசியிருப்பது விதியை மீறிய செயலாகும். இதை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

வன்னியர்களுக்கு ஏற்கெனவே 10.5 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். குரூப் 1, குரூப் 2-ல் உள்ள முக்கிய உயர் பதவிகளில் 10.5 சதவீதத்துக்கு மேல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை நிரூபித்தால், இன்றே எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளி விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக தயார் செய்து வெளியிட வேண்டும். அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி) 30% இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கான 3.5% தவிர மீதமுள்ள 26.5% இட ஒதுக்கீடு குறித்தும், எஸ்சி பிரிவு மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்பதும் குறித்தும் வெள்ளை அறிக்கை வேண்டும்.

x