பொள்ளாச்சி ஆனைமலை அருகே மது அருந்திய இருவருக்கு உடல்நிலை பாதிப்பு


கோவை / பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). டீக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர் மகேந்திரன்(44). கட்டிடத் தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம் மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து, பொள்ளாச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் இருவரும் கோவையில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இருவரும் கள்ளச் சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், போலீஸார் இதை மறுத்துள்ளனர்.

மேலும், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்கள் மது அருந்தும்போது அதில் கலந்த தண்ணீரின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் கூறும்போது, ‘‘இருவரும் அருந்திய மதுவில், பூச்சிமருந்து கலந்திருப்பதும், அவர்களது உடலில் மெத்தனால் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து: பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்துள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுவில் கள்ளச் சாராயத்தைக் கலந்து குடித்ததாக வெளியாகும் தகவல்கள் தவறானவை’’ என்றார்.

கடந்த 27-ம் தேதி மகேந்திரனின் உறவினரான கோவிந்தம்மாள்(80) உயிரிழந்துள்ளார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ரவிச்சந்திரன், மகேந்திரன், ராமகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார், டி.செந்தில்குமார், முத்துக்குமார், லட்சுமணன் ஆகியோர் கள்ளச் சாராயம் குடித்தாகக் கூறப்படுகிறது. அதை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மாவடப்பு என்ற மலைக் கிராமத்தில் வாங்கியுள்ளனர். அந்த கிராமத்தில் போலீஸார் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

x