அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், " திருப்பூர் மாவட்டம் மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதோடு அந்த பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளார்.
சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பாதிப்பு ஏற்படுள்ளது" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்," இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதையும், ஆக்கிரமிப்பைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனு குறித்து திரூப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.