கரீப் பருவத்துக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தல்


கோவை: கரீப் பருவத்துக்கு பயிர் காப்பீடு திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: 2016-17-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்துக்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, தற்போது விவசாயிகள் கரீப் பருவத்துக்கு சாகுபடி செய்யவல்ல நெல், சோளம், மக்காச்சோளம், கொள்ளு, உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிர்கள் அறிவிக்கை பயிர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவை மாவட்ட விவசாயிகள் மேற்கண்ட பயிர்களை சாகுபடி செய்திடும் பொழுது, இயற்கை பேரிடர்களிலிருந்து காத்துக்கொள்ள அவற்றை காப்பீடு செய்திடல் நலம்.

இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.764, சோளத்துக்கு ரூ.245, மக்காச்சோளத்துக்கு ரூ.722, கொள்ளு, உளுந்து, பச்சைப் பயறுக்கு ரூ.308 காப்பீடு கட்டணமாக செலுத்திட வேண்டும். இதற்காக விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ள குறிப்பிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளும் வசதியினை பெறலாம்.

கரீப் பருவத்துக்கு பயிர் காப்பீடு திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பயிர் காப்பீடு தொடர்பான விவரங்களைப் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.