“புதுச்சேரி மக்கள் பாவம் செய்தவர்களா?” - ரேஷன் கடைகள் செயல்படாததால் நாராயணசாமி கொந்தளிப்பு


நாராயணசாமி

புதுச்சேரி: “பிற மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்போது, புதுச்சேரி மக்கள் மட்டும் என்ன பாவம் செய்வதவர்களா?” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மாநிலங்களவையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் முன்வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்ததன் அடிப்படையில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் கோடிக் கணக்கான ரூபாய் கைமாறி இருக்கிறது என்று மத்திய அரசு விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மத்திய கல்வித் துறை அமைச்சர் நீட் தேர்வில் ஊழல் நடந்துள்ளது என்பதை பகிரங்க அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் நிராகரித்திருக்கிறார். இது இமாலய ஊழல். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாக வேண்டும் என்ற மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், 3-வது முறையாக மைனாரிட்டி அரசு நடத்துகின்ற பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நீட் தேர்வு சம்பந்தமாக எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மத்தியில் உள்ள பாஜக அரசு மாணவர்களை உதாசீனமாக நினைத்து இதற்கு பதில் சொல்லாமல் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது எதிர்கட்சித் தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் அவருடைய மைக்கை துண்டித்திருக்கிறார்கள். வரும் திங்கள்கிழமை நீட் தேர்வை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலின்போது, ரேஷன்கடைகளை திறப்போம் என புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி தங்களுடைய தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரேஷன்கடைகளை திறக்க எந்த நடவடிக்கையும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர், அமைச்சரிடம் பல்வேறு தொகுதிகளில் ரேஷன்கடைகளை திறக்காதது குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர்.

காங்கிரஸ் ஆட்சியில் பல முயற்சிகளை நாங்கள் செய்தும் அரசியல் காரணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ரேஷன் கடைகள் திறப்பதை தடுத்து நிறுத்தியது. அதன் விளைவுதான் இப்போது ரங்கசாமி ஆட்சியிலும் தொடரகிறது. பிற மாநிலங்களில் ரேஷன்கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா? புதுச்சேரியில் எப்போது ரேஷன் கடைகள் திறக்கப்படும். இதற்கு முதல்வரும், துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகரமைப்புக் குழுமம் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நகரமைப்புக் குழுமத்தின் மேல் முறையீட்டு கூட்டம் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில், விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக ரூ.30 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்குப் பிறகும் ஆட்சியாளர்கள் திருந்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. பொதுப்பணித்துறையில் 30 சதவீதத்துக்கு மேல் கமிஷன் பெறப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில் புரோக்கர்கள்தான் அதிகாரம் செய்கின்றனர். இதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறுவதில்லை. முதல்வர் தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடுவதாக நினைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக ஊழலை அனுமதிக்கிறார். புரோக்கர்கள் மூலம் தொழிலதிபர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்படுகிறது.

அமைச்சர் நமசிவாயம் சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். அவர் ஏற்கெனவே துபாய்க்கு 11 முறையும், சிங்கப்பூருக்கு 9 முறையும், மலேசியாவுக்கு 7 முறையும் சென்றுள்ளார். அரசின் பிரதிநிதியாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் அவர் சென்றுள்ளார். அவரின் இந்தப் பயணங்களில் மர்மம் உள்ளது. அமைச்சர் இப்படி வெளிநாடுகளில் சுற்றுவதால், அவர் வகிக்கும் துறைகளின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. சட்டம் - ஒழுங்கும் கேள்விக்குறியாகியுள்ளது.

சந்தனத் துகள் பறிமுதல் வழக்கில் புதுச்சேரி வனத்துறை அமைச்சர் மகளுக்கு சொந்தமாகன இடத்தில் தொழிற்சாலை உள்ளது. எனவே இதுகுறித்து அரசு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தார்மிக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.