மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குட்டை கொம்பன் யானையை கலீம், தனி ஆளாக விரட்டி விடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை கொண்ட திண்டுக்கல் மாவட்ட பகுதிகளான கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, சிறுமலை, வத்தலகுண்டு, நத்தம் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இது மட்டுமல்லாது சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக வசிக்கின்றன. பொதுவாக கோடை காலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலை அடிவாரங்களில் உள்ள விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் புகும் நிகழ்வுகள் நடப்பதுண்டு. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்கு-மனித எதிர்கொள்ளல் அதிகம் நடந்து வருகிறது.
குறிப்பாக கன்னிவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணைப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் தொந்தரவு தாங்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல், வனப்பாதுகாவலர் சுந்தரம், கோம்பை அருகே சுற்றித்திரிந்த யானைகளை விரட்டிய போது காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து தான் வனத்துறை அப்பகுதியில் உள்ள குட்டை கொம்பன் உள்ளிட்ட யானைகளை விரட்ட கும்கியை வரவழைத்துள்ளனர்.
பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து கலீம் மற்றும் சின்னதம்பி ஆகிய கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். கலீம் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் நடத்தப்பட்ட 99 ஆபரேஷன்களில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் யானை ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்ட 57 வயதான கலீம் மிகுந்த அனுபவம் கொண்டது.
ஆனால், கோவை பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்த சின்னதம்பி யானை தற்போது தான் கும்கியாக தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, கன்னிவாடி ஆபரேஷன் தான் முதல்முறை என்பதால், கலீமுக்கு துணையாக மட்டுமே பயன்படுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மே 1-ம் தேதி வரவழைக்கப்பட்ட கும்கிகள் கன்னிவாடி அருகே கோம்பையில் உள்ள முத்துபாண்டி கோயில் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, பாச்சலூர், பள்ளத்து கால்வாய், தாண்டிக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தொடர்ந்து, பல குழுக்களாக யானைகள் மலைப் பகுதிகளிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலூம், விவசாய பகுதிகளிலும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குட்டை கொம்பன் மிகவும் பொல்லாத யானை என்றும் தற்போது, வந்துள்ள இரண்டு கும்கிகளை சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அதுபோன்ற வாட்ட சாட்டமான தோற்றத்தைக் கொண்டது என்றும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சின்னதம்பி யானை நேற்று இரவு கன்னிவாடி முகாமிலிருந்து, டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், தனித்துவிடப்பட்டுள்ள கலீம், மிரட்டும் குட்டை கொம்பனை தனி ஆளாக நின்று நூறாவது ஆபரேஷனை சக்சஸ் செய்வானா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.