கோவை - ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


ஒண்டிப்புதூர் திறந்தவெளிச் சிறைச்சாலை

கோவை: ஒண்டிப்புதூர் திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள மரங்கள், விளைநிலங்களை அகற்றி கிரிக்கெட் மைதானம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மாற்று இடத்தை தேர்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில், தனியார் கல்லூரி வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு டி.என்.பி.எல், ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே தொடர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் இருப்பது போல் கோவையிலும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என மக்களவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கோவைக்கு வந்தார். கொடிசியா, பாரதியார் பல்கலைக்கழகம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர் திறந்தவெளிச் சிறைச்சாலை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அதில் ஒண்டிப்புதூர் திறந்தவெளிச் சிறைச்சாலை வளாகத்தில் 20.72 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது இறுதி செய்யப்பட்டது.

நிலம் வகை மாற்றம்: இத்திட்டத்துக்காக 20.72 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு - திறந்தவெளிச் சிறைச்சாலை பயன்பாட்டில் உள்ள இடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு வகை மாற்றம் செய்ய அரசு நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளிச் சிறைச்சாலை கடந்த 1981-ம் ஆண்டு பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டது.

இவ்வளாகத்தில் 940 தென்னை மரங்கள் உள்ளன. அது தவிர, கத்திரி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கைதிகளால் விவசாயப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மைதானம் அமைப்பதால் இங்குள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. செம்மொழிப் பூங்கா திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் கோவை மத்திய சிறை முன்னரே, காரமடைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே இடத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலையும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறும்போது,‘‘ நொய்யல் ஆற்றுப்படுகையான ஒண்டிப்புதூர், மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி. திறந்தவெளிச் சிறைச்சாலையில் 940-க்கும் மேற்பட்ட மரங்கள், பல ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. மைதானம் அமைக்க மரங்களையும், விளை நிலங்களையும் அகற்ற வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் பசுமைப்பரப்பு பாதிக்கப்படும். எனவே, சின்னியம்பாளையம், எல் அன்ட் டி புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களை மைதானத்துக்கு பரிசீலிக்கலாம். இதுகுறித்து ஆட்சியரிடமும் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார். கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் 29 ஏக்கரில் விளைநிலங்களும், மரங்களும், 1 ஏக்கரில் கட்டிடங்களும் உள்ளன. இங்கு கிரிக்கெட் மைதானம் அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது’’என்றார்.

கோவை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ 4 இடங்களை ஆய்வு செய்த அமைச்சர், ஒண்டிப்புதூரை இறுதி செய்துள்ளார். மற்ற இடங்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையினரால் இத்திட்டப்பணி மேற்கொள்ளப்படும். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின்னரே, மதிப்பீடு தெரியவரும்’’என்றனர்.