“தமிழகத்தில் கல்வி ‘கலைஞர்’ மயமாக்கப்பட்டு வருகிறது” - தமிழிசை குற்றச்சாட்டு


காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

வேலூர்: தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது என புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘வந்தே பாரத் ரயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. இந்த ரயிலை அறிவித்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ரயில் திட்டத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர்.

இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி. இதை பொறுத்துக் கொள்ளாத எதிர்க்கட்சியினர் பாஜக பிரித்தாள்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை, பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். விரைவில், சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.

நடந்து முடிந்த நான்கு கட்ட மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு இடம் கிடைத்துவிட்டது. தற்போது, எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார். தமிழக அரசு இண்டியா கூட்டணியில் இருந்துவரும் நிலையில் தமிழகத்துக்கு 2.5 டி.எம்.சி தண்ணீரை தர வேண்டுமென காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும், திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இப்போது ஆட்சியில் இருக்கும்போது காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை.

ஆனால், அதிகமாக டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்துள்ளார். இதுதான் திமுகவின் சாதனை. திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருந்து கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. எனவே, தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றமே கூறியுள்ளது.

திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிகளவில் தொடர்பு உள்ளது. கஞ்சாவை பொருத்தவரை காவல் துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் எந்தளவில் தொடர்பு உள்ளது என்பதை கண்காணிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். எனவே, போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

உயர் நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா விற்பனை தொடர்பாக காவல் துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கலாச்சாரம் கஞ்சா கலாச்சாரமாக மாறி வருகிறது. அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதலாக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கலைஞரை பற்றி 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது. தற்போது, எட்டாம் வகுப்பிலும் கலைஞரை பற்றி இடம்பெற்றுள்ளது.

பாஜக கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவி மயமாக்கப்படுகிறது என கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரை பற்றி எத்தனை பாடப் புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். இதற்கு, ஒரு வழிகாட்டு முறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை பற்றியும் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி' என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆட்சி என சொல்லிவிட்டார்’’ என்றார் அப்போது, வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x