மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


புதிய குற்றவியல் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலை வர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் உயர் நீதிமன்றம் நுழை வாயில் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பாரதிய நகரிக் சுரக்க்ஷாசன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சியச்சட்டம் பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம்செய்யப்பட்டு, சட்டப் பிரிவுகளிலும் பல்வேறுதிருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக நேற்று நடைபெற்றது.

அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் என். மாரப்பன் ஆகியோர் ஆர்ப்பாட் டத்துக்கு தலைமையேற்றனர்.

இதில் அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன் பேசும்போது, ‘‘இந்த 3 சட்டங் களும் வழக்கறிஞர்களுக்கும், பொதுமக் களுக்கும் பழக்கமில்லாத சட்டங்களாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே இவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு நாடாளுமன்றத்தில் விவாதித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு,
பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள்
சங்கத்தினர் அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர்
எஸ்.பிரபாகரன் தலைலமையில் உயர் நீதிமன்ற நுழைவாயில் முன்பாக
நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் (எம்எச்ஏஏ) மற்றும் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பிலும்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம்நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைவகித்தனர்.

ஒன்றிணைந்து போராடுவோம்: சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஆங்கிலத்தில் உள்ள குற்றவியல் சட்டங்களின் பெயர்களை வேறு மொழிகளில் பெயர் மாற்றம் செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இந்த சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெறாவிட்டால் அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து போராடு வோம்’’ என்றார்.