கள்ளச் சாராய சம்பவத்தில் கைதானவர்களில் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிசிஐடி மனு


கள்ளக்குறிச்சி / சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில், 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால்கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும்புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மொத்தம் 229 பேர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஒருவர் உயிரிழப்பு: இவர்களில் நேற்று முன்தினம் வரை 6 பெண்கள் உட்பட 64பேர் உயிரிழந்திருந்த நிலையில்,புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியசாமி (40) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழப்பு 65 ஆகஅதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் 19 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 145 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கள்ளச் சாராயம் தயாரிப்பு, விற்பனை தொடர்பாக இதுவரை 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், கைதானவர்களில் 9 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடந்த 25-ம் தேதி சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப் (எ) ராஜா, மடுகரை மாதேஷ், சிவக்குமார், பன்சிலால், கவுதம்சந்த், கதிரவன், கண்ணன் மற்றும் சக்திவேல் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் மற்றொரு மனுவை நேற்று தாக்கல் செய்தனர். இந்த மனு மீதுதிங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநரிடம் பிரேமலதா மனு: இதற்கிடையில், கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:

கள்ளச் சாராயத்தால் ஏற்படும்உயிரிழப்புகளை திமுக அரசால்தடுக்க முடியவில்லை. ஆளுங்கட்சியினர், காவல் துறையினரின் துணையுடன் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மக்கள் கூறுகின்றனர்.

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். திமுகவினர் மதுபான ஆலைகளை நடத்துகின்றனர். எனவே, அனைத்து மதுபான ஆலைகளையும் மூடவேண்டும். மதுவிலக்குத் துறைஅமைச்சர் பதவி விலக வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடர்பான மனுவை, ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

தமிழகத்தில் கள்ளச் சாராயத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றுஆளுநரும் வேதனை தெரிவித்தார். கஞ்சா மட்டுமல்ல, சிந்தடிக் ஃபைபர் போதைப் பொருட்களும் தமிழகம் புழக்கத்தில் உள்ளதாக அவர் கூறினார். இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் தமிழகத்தில் நேரிடாமல், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.