தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை வாய்ப்பு


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 28-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம், சின்கோனா, நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட், எமரால்டு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

x