“கவுன்சிலர்கள் உரிய மரபை பின்பற்ற வேண்டும்” - மதுரை மேயர் இந்திராணி எச்சரிக்கை


மேயர் இந்திராணி

மதுரை: "கவுன்சிலர்கள் உரிய மரபை பின்பற்ற வேண்டும்" என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது முதல் வாக்குவாதமும், சர்ச்சையும், பிரச்சனையுமாக சென்றது. கூட்டம் முடியும் தருவாயில் சுயேட்சை கவுன்சிலர் ஜெயசந்திரன் பேசும்போது, அவரது வார்டில் குழாய் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்த நடவடிக்கை குறித்து அலுவலர்களை ஒருமையில் பேசி, சண்டையிடுவது போல் பேசினார்.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து கூட்டத்தில் இருந்து அலுவலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் முடியும் தருவாயில் தடைபெறும் நிலை ஏற்பட்டது. கூட்டத்திற்கு இடையே அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கும் இடையே வார்த்தைப் போர் உருவானது. இதையடுத்து ஆணையாளர் அழைப்பை ஏற்று மீண்டும் அரங்கிற்குள் அலுவலர்கள் வந்தனர்.

பின்னர் மோதலுக்கு இடையே தலையிட்ட மேயர் பேசுகையில், "கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உரிய மரபை பின்பற்ற வேண்டும். சண்டையிடுவது போல் பேசக்கூடாது" என அறிவுரை கூறினார்.