மோசடி தொழிலதிபர்களுக்கு 3 ஆண்டு... உடந்தையான வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் அதிரடி


இந்தியன் வங்கிக் கிளையை ஏமாற்றி கடன் பெற்று மோசடி செய்த நாமக்கல்லைச் சேர்ந்த இரு தொழிலதிபர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் உடந்தையாக இருந்த வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது கோவை சிபிஐ நீதிமன்றம்.

நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் சக்திவேல், விஜயகுமாரி. இருவரும் தனியார் இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு நாமக்கல் இந்தியன் வங்கி கிளையில் இருவரும் போலி ஆவணங்களை கொடுத்து கடன் விண்ணப்பம் அளித்துள்ளனர். வங்கி மேலாளர் பாலசுப்ரமணியன் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்காமல் விதிமுறைகளை மீறி அவர்களுக்கு கடன் வழங்கியுள்ளார். கடன் பெற்ற தொழிலதிபர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு ரூ.2 கோடியே 61 லட்சத்து 63 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் வங்கி நிர்வாகம் கோவை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. போலிச் ஆவணங்களை கொடுத்து கடன் பெற்ற குற்றத்திற்காக தொழிலதிபர்கள் சக்திவேல், விஜயகுமாரி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல், விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வங்கி மேலாளர் பாலசுப்ரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

x