பயிற்சி முகாமில் ஆசிரியைகளை பயிற்சியாளர் இழிவாக பேசியதாக காஞ்சிபுரத்தில் கண்டன போராட்டம்


காஞ்சிபுரம் செவிலிமேடு ஆரம்பப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் பயிற்சியாளர், ஆசிரியைகளை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து ஆசிரிய, ஆசிரியைகள் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புவரை பாடம் நடத்தும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் ஒருவருக்கும், ஆசிரியைகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்ப, அவர்களையும் அந்த பயிற்சியாளர் இழிவாக பேசியும், மிரட்டும் தொணியிலும் வாட்ஸ் அப் பதிவுகளை போட்டுள்ளார்.

பின்னர் அவரது மேலதிகாரிகள் உத்தரவுப்படி அதனை அழித்துள்ளார். இருப்பினும் அந்த ஆடியோ பதிவுகளை பதிவு செய்து பலருக்கும் கோவத்தில் ஆசிரியர்கள் சிலர் அனுப்பினர். இதனால் ஆந்திரம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் பயிற்சி நடைபெற்ற செவிலிமேடு அரசு ஆரம்பப் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியைகளையும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் இழிவாக பேசிய பயிற்சியாளரை கைது செய்யக் கோரியும் கோஷம் எழுப்பினர்.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலர் சேகர் கூறுகையில், "பயிற்சியாளர் கந்தவேல் என்பவர் ஆசிரியைகளை இழிவாக பேசியுள்ளார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் அவதூறாகப் பேசியுள்ளார். அவரை பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கொடுக்க உள்ளோம்” என்றார்.

இது குறித்து காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெய்சங்கரிடம் கேட்டபோது, "பயிற்சி அளிக்கும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பின்னர் வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவுகள் போட்டதாக தெரிவித்துள்ளனர். பயிற்சியாளர் எங்கள் கட்டுப்பாட்டில் வருபவர் இல்லை என்பதால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வருபவர். எனவே இந்தப் பிரச்சினை குறித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.