கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாடம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை


தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘உங்கள் குரல்’ வாயிலாக மாடம்பாக்கம் பத்மாவதி நகரை சேர்ந்த வாசகர் பாஸ்கர் கூறியதாவது:

பேரூராட்சியாக இருந்தவரை... மாடம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது அதிகாரிகளை நேரில் சந்தித்தும் குறைகளை தெரிவிக்கவும் வசதியாக இருந்தது. உடனடியாக தீர்வும் கிடைத்து வந்தது. பிறகு, மாநகராட்சியாக மாறிய பிறகு கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.

யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற பிரச்சினையும் தற்போது உள்ளது. ஆன்லைனில் புகார் தெரிவித்தால்கூட நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவிக்க மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். ஆனால், அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் சில பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு கால்வாயிலிருந்து அகற்றப்படும் கழிவு நீர் கலந்த சேற்றை கால்வாயின் ஓரத்திலேயே போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் இதனால் அவதிக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்த சேறு மீண்டும் கால்வாய்க்குள் சென்று சேர்ந்து விடுவதும் நடக்கிறது.

குறிப்பாக, வார்டு 68-ல், மாடம்பாக்கம், பத்மாவதி நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயை தூர்வாரினர். பின்னர் தூர்வாரப்பட்ட மண்ணை அருகிலேயே, சாலையோரம் கொட்டிவிட்டு சென்றனர். இதனால் மழை வந்தால் மீண்டும் அந்த மண் கால்வாய்க்குள்ளேயே செல்லும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கை இல்லை.

இதனால், குடிருப்புவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். துார்வாரப்படும் சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தூர்வாரும் பணியில் பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகிறது. எனவே, தூர்வாரும் பணியை மாநகராட்சி முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த வாசகர் தெரிவித்துள்ளார்.

பணியை கண்காணிப்போம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பத்மாவதி நகரில் தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தூர்வாரும் பணியை முறையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.

x