கோவை - அவிநாசி சாலையில் உயர்மட்ட பாலம் பணிகள் தீவிரம்: போக்குவரத்து மாற்றம்


கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில் சந்திப்பு அருகே செல்லும் வாகனங்கள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை - அவிநாசி சாலையில் உயர்மட்டப் பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை - அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், ரூ.1,621 கோடி மதிப்பில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. இதில் பெரும்பாலான தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.

நவஇந்தியா - ஹோப்காலேஜ் சந்திப்பு, ஹோப்காலேஜ் - ரயில்வே மேம்பாலம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஹோப்காலேஜ் - குப்புசாமிநாயுடு மருத்துவமனை சந்திப்பு, எஸ்.ஓ.பங்க் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர்மட்டப் பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா சிலை சந்திப்பிலிருந்து அவிநாசி சாலை செல்லக் கூடிய வாகனங்கள், லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக சென்று, ராமநாதபுரம் சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி திருச்சி சாலை வழியாக சென்று அவிநாசி சாலையை அடையலாம்.

அவிநாசி சாலையில், அவிநாசி நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், பயனியர் மில் சாலை வழியாக இடது புறமாக திரும்பி ரயில்வே மேம்பாலம் வழியாக ஏறி காந்தி மாநகரை கடந்து தண்ணீர் பந்தல் எஸ் பெண்ட் வழியாக டைடல் பார்க் சென்று அவிநாசி சாலையை அடையலாம். அல்லது கொடிசியா வழியாகவோ, காளப்பட்டி வழியாகவோ சென்று அவிநாசி சாலையை அடையலாம். சிங்காநல்லூரிலிருந்து அவிநாசி சாலை செல்பவர்கள், காமராஜர் சாலை வழியாக செல்லாமல், சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிப்புதூர், எல் அண்ட் டி பைபாஸ் சாலை வழியாக சென்று அவிநாசி சாலையை அடையலாம்.

வாகனங்களை பயன்படுத்துவோர் சத்தி சாலை மற்றும் திருச்சி சாலையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தி அவிநாசி சாலையில் பீளமேடு, ஹோப்காலேஜ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x