“சாதிவாரி கணக்கெடுப்பைத் தட்டிக்கழித்த தமிழக அரசின் செயல் ஏற்புடையடது அல்ல” - எஸ்டிபிஐ


திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருச்சி: “2008-ம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்கிறபோது, சமூகநீதி மாநிலமான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து, மத்திய அரசின் பக்கம் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசின் இந்தச் செயல் ஏற்புடையதல்ல” என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியது அரசின் நிர்வாகத் தோல்வியையும், காவல்துறையின் செயல்படாத நிலையையும், கள்ளச்சாராய கும்பலுக்கு ஆதரவான காவல்துறையில் உள்ளவர்களின் போக்கையுமே காட்டுகிறது.

கள்ளச்சாராய மரணத்தை விட அரசின் டாஸ்மாக் மதுவாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. மதுப்பழக்கத்தால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது தேசிய சராசரி அளவைவிட அதிகமாக உள்ளது. சுமார் 30 சதவீத மரணங்கள் மதுப்பழக்கத்தால் ஏற்படும் உபாதைகளால் ஏற்படுபவை. அதேபோல் பல குற்றச்செயல்களும் மதுபோதையால் ஏற்படுபவையாக உள்ளன. ஆகவே, தமிழக அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்தி, மதுவால் ஏற்படும் குற்றச்செயல்களையும், பாதிப்புகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு குறித்தும், சமூகத்தை மேம்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் அறிய சாதிவாரி கணக்கெடுப்பு முறையே ஆதாரமாகும். எனவே, எஸ்டிபிஐ கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

2008-ம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்கிறபோது, சமூகநீதி மாநிலமான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து, மத்திய அரசின் பக்கம் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக அரசின் இந்தச் செயல் ஏற்புடையதல்ல. நீட் விலக்கு தீர்மானம், முல்லை பெரியாறுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் எல்லாம் மத்திய அரசால் கண்டுகொள்ளப்படாத நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்து, சமூகநீதியின் அடையாளமாக விளங்கும் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு சாதியினரின் பலத்தை சரியாக கணக்கீடு செய்து, அதன்மூலம் அவர்களுக்கு உரிய மற்றும் போதுமான பிரதிநிதித்துவம், அந்தந்த மக்கள் தொகையின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப உறுதி செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து சமூக மக்களுக்கும் அர்த்தமுள்ள சமூக மற்றும் அரசியல் நீதி வழங்கப்பட வேண்டும்.

தமிழக சட்டமன்ற கூட்டம் ஆண்டுக்கு 180 நாட்கள் நடைபெறும் என ஆளும் அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுபோல் நடைபெறவில்லை. கூட்டத்தொடர் பெரும்பாலும் அவசரகதியிலேயே நடைபெற்று வருகின்றது. மக்கள் பிரச்சினைகள் குறித்து முழுமையாக விவாதிக்க உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. மக்கள் பிரச்சினைகளை ஜனநாயக அடிப்படையில் பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் அவர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு அதிதீவிரமான பிரச்சினையைப் பற்றி விவாதிக்கக் கூட அனுமதிக்க மறுக்கும் நிலை என்பது கவலைக்குரியது. அதேபோல் மக்கள் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை உதாசீனப்படுத்துவது போன்று நக்கல் செய்யும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகளை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் சரியான முறையில் கேள்விகளை எழுப்ப அனுமதிப்பதும், அதற்கு பதிலளிப்பதுமான தேவை இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஏழை, எளிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை தகர்க்கும் நீட் எனும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற தீர்மானத்துடன் நிறுத்திவிடாமல், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் விரைந்து நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பைப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் கல்விக்கான மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீடை தடுத்து நிறுத்தவும், கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சிக்கு எதிராகவும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் ஆமை வேகத்தில் செயல்பட்டு வரும் மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழுவை வேகப்படுத்தி விரைவில் மாநில கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் ஏறக்குறைய 5 லட்சம் வரை காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், 2026-க்குள் சுமார் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்கிற அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு லட்சக்கணக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதில், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் இலியாஸ் தும்பே, அப்துல் மஜீத் பைஸி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.