4 ஊராட்சிகளை பேரூராட்சியில் இணைப்பதை எதிர்த்து சாலை மறியல்: 131 பேர் மீது வழக்கு @ ஊத்துக்கோட்டை


மாதிரிப் படம்

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 4 ஊராட்சிகளை இணைக்கக் கூடாது எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 131 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சியை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இணைப்பதற்கான சாத்தியக் கூறுகள்உள்ள ஊராட்சிகளின் பட்டியலை தமிழக அரசுக்கு ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ளது.

அந்த பட்டியலில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியை ஒட்டியுள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனந்தேரி, பேரிட்டிவாக்கம், போந்தவாக்கம், நந்திமங்கலம் மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து அனந்தேரி, பேரிட்டிவாக்கம், போந்தவாக்கம், நந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் ஊராட்சிகளை ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இணைப்பதை தவிர்க்கக் கோரி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் “எங்கள் ஊராட்சிகளை பேரூராட்சியில் இணைத்தால் சொத்துவரி உயரும், ஊராட்சிகளுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கிடைக்காது.

ஆகவே, தாராட்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகளை ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இணைக்க கூடாது” எனக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அவர்களில் 131 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருவள்ளூர் டவுன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

பின்னர், போராட்டக்காரர்களில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இப்போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.ஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர் அன்பு உள்ளிட்ட 31 ஆண்கள், 100 பெண்கள் என 131 பேர் மீது அனுமதியின்றி, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.