சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைகாற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக இன்றும், நாளையும் (ஜூன் 28, 29) ஓரிரு இடங்களிலும், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும், ஜூலை 2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட்டில் 13 செ.மீ., பந்தலூர், அவலாஞ்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் 12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் மேல் பவானி, ஊட் பிரையர் எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் 9 செ.மீ.,நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 8 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.