மதுரை: மதுரை சத்திரப்பட்டியில் மாற்று சமூகப் பெண்ணை காதலித்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி இன்று தமிழ்ப் புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாம் நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் மதுரை வீரன், நீதிவேந்தன், பவுலி வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எல்லாளன், கனியமுதன், மூவேந்தர் புலிப்படை நிர்வாகி ஐங்கரன், தலித் விடுதலை இயக்க நிர்வாகி கருப்பையா, புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி குமரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், படுகொலை செய்யப்பட்ட அழகேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியரிடம் அழகேந்திரனின் பெற்றோர் மாரிமுத்து-மாரியம்மாள் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
அதில், "விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தைச் சேர்ந்த எங்களுக்கு அழகேந்திரன், அருண்பாண்டி ஆகிய 2 மகன்கள். மூத்த மகன் அழகேந்திரன் எங்களது ஊரிலுள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் ருத்ரபிரியாவை காதலித்தார். இதனை அறிந்த அப்பெண்ணின் தந்தை சீனிவாசன், தாய்மாமன் பிரபாகரன் ஆகியோர் எனது மகனை எச்சரித்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் தாய்மாமன் ஜூன் 26-ம் தேதி இரவு எனது மகனை சத்திரப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சத்திரப்பட்டி வேலாம்பூர் கண்மாயில் கொலை செய்துள்ளனர். எனது மகனை ஆணவப் படுகொலை செய்த பிரபாகரன், சீனிவாசன் ஆகியோரை கைது செய்து எனது மகனின் கொலைக்கு நீதி வழங்க வேண்டும்" என்று கோரியுள்ளனர்.