கன்னியாகுமரி: குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து நாற்று நட்டு விவசாயிகள் போராட்டம்


குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் கூட்ட அரங்கு நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்: குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் கூட்டம் நடந்த நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாற்று நட்டு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை நீர்ஆதார செயற்பொறியாளர் ஜோதிபாசு, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, மற்றும் வேளாண் பிரதிநிதிகள் திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை குமரி மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அப்போது கையில் நெல் நாற்றுகளை ஏந்தி வந்த ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது. தோவாளை பாசன கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை இதுவரை சரிசெய்யாததால் அப்பகுதியில் நடவு செய்யப்பட்ட 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக பாசன கால்வாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் திறந்து விடவேண்டும் எனவும் அந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நாற்றுகள் நட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகள்.

இதைப்போல் ஏற்கெனவே சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும். குமரி மாவட்டம் முழுவதும் பாசன கால்வாயை தூர்வாரமல் கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் விட்டதால் தண்ணீர் வீணாகி வருவதுடன், இதுவரை கடைமடை பகுதியை வந்தடையவில்லை. எனவே குமரி மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்க அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷம் எழுப்பியவாறு விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கூட்டம் நடந்த நாஞ்சில் அரங்கின் வெளியே வந்து நெல் நாற்றுகளுடன் நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷமிட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கிய மழைநீரில் சில விவசாயிகள் நாற்று நட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் விவசாய பிரதிநிதிகள் தங்கப்பன், புலவர் செல்லப்பா, தேவதாஸ், செண்பகசேகர பிள்ளை உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து குமரி பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறுகையில்; ''கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தோவாளை பாசன கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை கன்னிப்பூ சாகுபடி துவங்கி ஒரு மாதத்திற்கு பின்னரும் சரிசெய்யவில்லை. இதனால் அங்கு நடவு செய்த நெல்நாற்றுகள் மழை இல்லாத நேரத்தில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 600 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதமாகும் நிலையில் உள்ளது. இதைப்போன்றே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பாசனத்துறையிடமும் வலியுறுத்தியும் பாசன கால்வாய்யை தூர்வாராமல் கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே இவற்றிற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணாவிட்டால் விவசாயிகள் மாவட்ட அளவில் திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.