கோவில்பட்டி: தமாகாவினர் பாய் விரித்து அமர்ந்து நூதன போராட்டம்


கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்காததை கண்டித்து தமாகாவினர் இன்று காலை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்திற்கு வேலை நாட்களில் அரசு உயரதிகாரிகள் தொடங்கி சாமானியர்கள் வரை சுமார் 5 ஆயிரம் பேர் வரை தினமும் வந்து செல்கின்றனர். அப்படி இருந்தும் இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமாகா சார்பில் மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு மட்டும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனபோதும் அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சாலை சீரமைக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் சாலையையே சீரமைக்காததை கண்டித்தும், ஒன்றரை ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும் இன்று காலை தமாகா சார்பில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் பாய் விரித்து அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்கப்படாததை கண்டித்தும், தொடர்ந்து மனு அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமாகாவினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோட்டாட்சியர் பங்கேற்றுள்ளதால் கோரிக்கை மனுவை மட்டும் தந்துவிட்டு கலைந்து செல்லும்படி போலீஸார் அவர்களை அறிவுறுத்தினர்.

ஆனால், ''நாங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி விட்டோம். ஏராளமான மனுக்களும் அளித்து விட்டோம். எதற்குமே நடவடிக்கை இல்லை. அதனால் எங்களுக்கு உரிய தீர்வு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்'' என தமாகாவினர் தெரிவித்தனர். இருந்த போதும் போலீஸார் அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிட வைத்தனர்.

இந்தப் போராட்டத்தில், தமாகா நகர பொருளாளர் ஜி.செண்பகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.திருமுருகன், நகரச் செயலாளர் வி.எஸ்.சுப்புராஜ், நகர துணை தலைவர் வி.மணிமாறன், வட்டார துணை தலைவர் கே.செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.