திமுக அரசுக்கு எதிரான அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு


சென்னை: திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அதிமுகவுக்கு, ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச் சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து, எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவையும் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும்.'' இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.