தி.மலையில் தனியார் நிறுவனம் ரூ.5 கோடி மோசடி: மாவட்ட எஸ்.பி.யிடம் விவசாயிகள் புகார்


நெல் கொள்முதலில் தனியார் நிறுவனம் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக கூறி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் புகார் தெரிவித்த விவசாயிகள். | படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கூடுதல் விலை தருவதாகச் சொல்லி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல், மணிலா உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து தனியார் நிறுவனம் ரூ.5 கோடி மோசடி செய்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

விளை நிலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. இதேபோல் தனியார் நிறுவனம் மற்றும் தனி நபர்கள் மூலமாகவும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்லுக்கான கொள்முதல் விலையை வழங்குவதில் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் உத்தரவாதம் உள்ளதால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

அதேசமயம் ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதலாக கிடைக்கிறது என்பதால் தனியார் நிறுவனம், தனி நபர் மற்றும் இடைத்தரகர்களிடம் நெல்லைக் கொடுத்து, பணம் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைவதும் இப்பகுதியில் வாடிக்கையாக உள்ளது. திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் கிராமத்தில் தனியார் நிறுவனம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தானியக் கிடங்கு, திருவண்ணாமலையை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ளது. ஜெய்கணேஷ் என்பவர் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார்.

அரசாங்கம் வழங்குவதை விட நெல் உள்ளிட்ட தானியங்களுக்கு கூடுதல் விலை வழங்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்தது. இதை நம்பி நெல்லைக் கொடுத்துவிட்டு சுமார் 400 விவசாயிகள் ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். இந்த விவசாயிகள் சிலருக்கு நெல் கொள்முதலுக்கான காசோலையை அந்தத் தனியார் நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதை அந்த விவசாயிகள் உடனடியாக வங்கியில் கொடுத்து காசாக்கி இருக்கிறார்கள். நெல்லுக்கான கூடுதல் தொகை மற்றும் உடனுக்குடன் பணம் பட்டுவாடா என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் பலரும் தனியார் நிறுவனத்திடம் கொண்டு வந்து தானியங்களை விற்றிருக்கிறார்கள்.

அப்படி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செங்கம், சேத்துப்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்பட்ட நெல், மணிலா உள்ளிட்ட தானியங்களை, தனியார் நிறுவனத்திடம் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். இவற்றை கொள்முதல் செய்த அந்த நிறுவனம் ஜுன், ஜுலை மாதங்களுக்கு, பின் தேதியிட்ட காசோலைகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. இந்த நிலையில் ஜுன் மாதத்துக்கான காசோலையை விவசாயிகள் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது.

இதனால் அந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஏந்தல் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அவர்கள் படையெடுத்தனர். அப்போது அலுவலகம் மூடப்பட்டிருந்தது. தானியக் கிடங்கும் காலி செய்யப்பட்டு மூடிக் கிடந்தது. நிர்வாகி ஜெய்கணேஷை கைபேசியில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை விவசாயிகள் உணர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்திடம் இருந்து நெல் கொள்முதல் தொகையை பெற்றுத் தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் விவசாயிகள் இன்று தனித்தனியாக புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ''நம்மாழ்வார் ஆர்கானிக் நிறுவனம், சில விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணத்தை கொடுத்து நம்பகத்தன்மையை பெற்றனர். நாங்களும் கூடுதலாக விலை கிடைக்கிறது என்பதால் நெல் மூட்டைகளை கொண்டு சென்று கொடுத்தோம். மணிலா உள்ளிட்ட தானியங்களையும் விவசாயிகள் கொடுத்துள்ளனர். எங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், மணிலா உள்ளிட்ட விளை பொருட்களுக்கான தொகையை காசோலையாக நிர்வாகி ஜெய்கணேஷ் வழங்கினார். தனியார் வங்கியில் காசோலையை செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது.

நம்மாழ்வார் ஆர்கானிக் அலுவலகம், கிடங்கு ஆகியவை இப்போது மூடிக் கிடக்கிறது. ஜெய்கணேஷின் கைபேசியும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சுமார் 400 விவசாயிகளிடம் இருந்து நெல் உள்ளிட்ட விளை பொருட்களை கொள்முதல் செய்து, ரூ.5 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்வதுபோல், விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். வெயில், மழை பாராமல் நெல் சாகுபடி செய்து கொடுத்தோம். எங்களது உழைப்பையும், விளைபொருட்களையும் திருடி உள்ளனர். இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றனர்.